Saturday 6 June 2015

யார் பிரமாண்ட இயக்குநர்..? ராஜமெளலி பதில்..!


தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்கள் யார் என்றால் அது இயக்குநர் ஷங்கரும், தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியும் தான். தென்னிந்திய அளவில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் இந்த இரண்டு இயக்குநர்களின் படம் என்றால் மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.
’எந்திரன்’ படம் மூலம் புதிய டெக்னாலஜிகளை இந்திய சினிமாவுக்கு ஷங்கர் அறிமுகம் செய்து வைத்தாரென்றால், ‘மஹதீரா’ மூலம் தன் பங்குங்கும் புதிய தொழில்நுட்பங்களை களமிறக்கினார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதனையடுத்து சமீபத்தில் வெளிவந்த ‘ஐ’ படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் ஷங்கர்.
இந்தப் படம் வெளிவந்தபிறகு ஷங்கர் தான் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால், ‘பாகுபலி’ டிரைலர் வெளிவந்ததும் இந்து பேச்சு அப்படியே ராஜமௌலியை நோக்கித் திரும்பியது.
ஷங்கரைவிட ராஜமௌலியே சிறந்தவர் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொண்டனர். அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக வடிவமைத்திருந்தார் ராஜமெளலி. ஆனால், இந்த சர்ச்சைக்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
நேற்று ‘பாகுபலி’ தமிழ்ப்பட டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குநர் ராஜமௌலி, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ராஜமௌலி‘தயவுசெய்து ஷங்கருடன் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அவர் இந்திய சினிமாவிற்கு பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்தவர். ஷங்கருக்கு அடுத்தபடியாக நான் இருக்கிறேன் என்று சொன்னால்கூட, அதை நினைத்து நான் சந்தோஷப்படுவேன். ராஜமௌலிக்கு அடுத்து ஷங்கர் என்று சொல்வதை என்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது’ என கூறினார்.

No comments:

Post a Comment