Tuesday 9 June 2015

புலம் பெயர்ந்தவர்கள் நாடோடிகளா?

புலம் பெயர்ந்தவர்களை நாடோடிகள் என்று சொன்னால் தகுமா? என்ற கேள்வியை ஒரு கல்லூரி மாணவி கேட்டார். இடப்பெயர்வு என்பது மொழிவழி எல்லையைக் கடந்து அமைவதால் இரண்டும் ஒன்றாகத் தெரியலாம்.
ஆனால் கூர்ந்து பார்த்தால் இரண்டும் இரண்டு முனைகள். நாடோடிகள் என்பவர்கள் இனக்குழு மனிதர்களில் சிதறடிக்கப்பட்டு இனக்குழு அடையாளத்தையும் இழந்து நகர்வாழ் மக்களின் வாழ்வோடும் ஒட்டாமல் ஊர் ஊராக நாடு நாடாக அலைந்து திரிபவர்கள். பல நூறு ஆண்டுகளாக ‘நாடோடி’களாக வாழ்பவர்கள். புலம் பெயர்ந்தவர்கள் என்ற சொல் அண்மைக்கால அரசியல் விஞ்ஞானக் கலைச் சொல். ஈழத்தமிழர்கள் போராட்ட வாழ்வனுபவத்தில் அகதிகள், தாயகம், திரும்பியவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என்ற அடையாள முத்திரைகள் வழங்கப்படுகின்றன.
காலம் காலமாகத் தம் மண்ணோடும் தம் மரபோடும் தனிப் பண்பாட்டோடும் மொழி வளத்தோடும் வாழ்ந்தவர்கள் அரசியல் போராட்டத்தால் தேசிய இன ஒடுக்குமுறையால் உள்நாட்டுப் போரால் தம் தாயகத்தைத் துறந்து வெளியேற வேண்டிய நெருக்கடி நேர்கிறது. ஈழத்துத் தமிழ் மக்களுக்கும் சிங்கள இனவெறி அரசுக்கும் இடையே 1970 களிலிருந்து முரண்பாடு முற்றி வெடிக்கத் தொடங்கியது.
தற்போது அது நீண்ட கால கெரில்லாப் போராகவும் சில நேரங்களில் நேரடிப் போராகவும் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போர் சூழலில் அமைதி வாழ்வைப் பறிகொடுத்த பொதுமக்கள் தப்பிப் பிழைக்க, இலட்சக்கணக்கில் 1980களில் தமிழகத்துக்கு வந்தனர். இவர்களை அகதிகள் என்று அரசு வரையறுத்தது. இவர்கள் பொருளாதார வசதி குறைந்தவர்கள்.
வசதி மிக்கவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்தவர்களில் உடல் உழைப்பாளர்களும் மூளை உழைப்பாளிகளும் அடங்குவர். எழுத்தாளர்களும், கலைஞர்களும் புலம் பெயர்ந்தனர். ஈழமுரசு உலகத்தமிழர் முழக்கம், சுவடு, காலம், மௌனம், ஓசை முதலான நூற்றுக்கணக்கான ஏடுகள் உலக நாடுகளிலிருந்து வெளிவருகின்றன.
தமிழுக்கென தனியார் சேட்டிலைட் வானொலி நிலையங்கள் பாரிஸ், கனடா முதலிய நாடுகளில் 24 மணி நேர ஒலிபரப்பைச் செய்து வருகின்றன. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் மரக்கலம் மூலம் வந்து இறங்கிய வாஸ்கோடகாமா தென் இந்தியாவில் பேசப்படுகிற மொழி என்று தமிழை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
மேலை நாடுகளிலிருந்து வெளிநாட்டவர் இங்கு வந்து கேட்ட தமிழ், இன்று மேலை நாடுகளுக்குச் சென்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் மூலம் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்கிறது. வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழர்களின் மரபுவேரும் பண்பாட்டு விழுதுகளும் இலக்கியச் செழுமையும் ஈழத்தில் கால் கொண்டுள்ளன.
ஆனால் வாழ்க்கை ஐரோப்பிய இயந்திர கதியில் நிலைகொண்டுள்ளன. இதனால் ஈழத்தமிழ் மக்களின் குழந்தைகளுக்கு அடையாளம் தொலைக்கும் அவலம் நேர்ந்துள்ளது. தொலைதூரத்தில் உள்ள தாயகம் தமது வாழ்க்கையில் கிட்டாத கனவாக மாறிவிடக்கூடிய துயரமும் ஏற்படலாம் என்றாலும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஐரோப்பாவில் தமிழ் விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழத்தில் வாழும் தமிழ் மக்களும் போராட்டத்தை வாழ்க்கையாகத் தகவமைத்துக் கொண்டு இன்னுயிரை ஈந்து கொண்டிருக்கிறார்கள்.
- வைகறை

No comments:

Post a Comment