Friday 12 June 2015

இனிமே இப்படித்தான் – விமர்சனம்

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ’இனிமே இப்படித்தான்’. இரட்டையர்களான பிரேம் ஆனந்த், முருகன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ஆஷ்னா ஜாவேரி, அகிலா கிஷோர் நடித்துள்ளனர்.
ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சந்தானத்தின் நண்பரான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட்ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார்.
காமெடி நடிகர் சந்தானம் இரண்டாவது முறை ஹீரோவாக நடித்துள்ள இப்படம் எப்படித்தான் இருக்கிறது..? என்ன தான் கதை..? என்று பார்ப்போம்..
சந்தானத்திற்கு வயதாகிக்கொண்டே செல்வதால் அவருடைய வீட்டில் அவருக்கு பெண் பார்கிறார்கள். ஆனால் சந்தானத்தின் நண்பர்களோ, அவரை காதல் திருமணம் செய்யச் சொல்லி மனதை மாற்றுகிறார்கள். அந்த நேரத்தில் தான் ஆஷ்னா ஜாவேரியை பார்த்து அவருடைய அழகில் மயங்கி அவரை ஒன் சைடாக காதலிக்க தொடங்குகிறார் சந்தானம்.
அதேநேரம் அகிலா கிஷோரை சந்தானத்திற்கு வீட்டில் பேசி முடிக்கிறார்கள். பலவித முயற்சிகளுக்குப்பிறகு சந்தானத்திடம், ஆஷ்னா ஜாவேரி காதலைச் சொல்கிறார். இந்தப்பக்கம் அகிலாவுக்கும், சந்தானத்திற்கும் நிச்சயமும் நடக்கிறது.ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் சந்தானம் யாரைக் கைபிடிக்கிறார்? யாரைக் கழட்டிவிடுகிறார் என்பதே இந்தப் படத்தின் கதை.
முதல் படத்தைவிட இந்தப் படத்தில் சந்தானத்தின் நடிப்பு முன்னோற்றம் அடைத்திருக்கிறது. இருந்தாலும் பல இடங்களில் அவர் காமெடி நடிகர் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஆனால் சந்தானம் படத்தில் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ, அது அத்தனையும் இப்படத்தில் இருக்கிறது.
கூடவே படத்தை நகர்த்திச் செல்ல ஒரு சுமாரான கதையும், அதை போராடிக்காமல் கொண்டு செல்ல சுவாரஸ்யமான திரைக்கதையும் இருக்கிறது.
முதல்பாதியின் ஆரம்பக்காட்சிகள் கொஞ்சம் அப்படி இப்படியிருந்தாலும், கொஞ்சரேநத்திலேயே படம் சூடுபிடிக்கிறது. அதோடு இடைவேளைக்காக தேர்ந்தெடுத்திருக்கும் சூழ்நிலை, ரசிகர்களை உற்சாகமாக கேன்டீனுக்கு அனுப்பி வைக்கிறது. தவிர, இப்படி ஒரு க்ளைமேக்ஸையும் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இரண்டாம்பாதியில் தேவையில்லாமல் சொருகியிருக்கும் 3 பாடல்களை ‘கட்’ செய்திருந்தால் இரண்டாம்பாதி இன்னும் சூடுபிடித்திருக்கும். ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருந்தாலும், டிஐயில் அதிகப்படியான ஃபில்டர்களைப் போட்டிருக்கிறார்கள்.
படம் முழுக்க அனைத்து கேரக்டர்களும் ‘பளபள’வென சுற்றுவதைப் பார்க்க காமெடியாக இருக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் ரொம்ப எதிர்பார்க்காமல் போனால் பொழுதை கழித்துவிட்டு வரலாம்.

Related posts

No comments:

Post a Comment