Thursday 30 April 2015

20 தமிழர்கள் படுகொலை: மனித உரிமை மீறல் நடந்தது உறுதி


ஆந்திர வனப்பகுதியில், தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மனித உரிமை மீறல் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்று தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின், சேஷாச்சலம் வனப்பகுதியில், கடந்த 7ம் தேதி, 20 தமிழக தொழிலாளர்கள், ஆந்திர போலீஸாரால், சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள், விசாரணைக்காக அழைத்துச் சென்றுக் கொல்லப்பட்டதாக சர்ச்சையான கருத்து நிலவி வந்தது. ஆனால், இது குறித்து விளக்கமளித்த ஆந்திர அரசு, பலியானவர்கள் உட்பட சுமார் 200 பேர் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அவர்களை சரணடையச் சொன்ன போது போலீஸாரை எதிர்த்துத் தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், 20 பேரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதை நிரூபிக்கும் விதமாக சில சான்றுகள் ஊடகங்களின் பார்வையில் சிக்கின. இதைத் தொடர்ந்து இவ்விவகாரம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் எடுத்துச் செல்லப்பட்டது. அதே வேளை, ஐதராபாத் உயர்நீதிமன்றத்திலும் இது குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவத்தில் தப்பி வந்ததாக இருவர், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு சென்று சாட்சியம் அளித்தனர். இதை அடுத்து மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வழகில் தொடர்புடைய சாட்சியங்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் முருகேசன் ”ஆந்திராவில் மனித உரிமைகள் நடந்திருபது தெளிவாகத் தெரிகிறது. ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் வழக்கின்படி விசாரணை தீவிரப்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 சாட்சிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment