Friday, 24 April 2015

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய தமிழர்கள்! சிறப்பு விருதளித்த சிங்கப்பூர்!!


சிங்கப்பூரில் அடுக்குமாடி ஒன்றின் மேல் சிக்கித் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை தமிழகத் தொழிலாளர்கள் இருவர் காப்பாற்றியுள்ளனர். இவர்களுக்கு சின்கப்பூர் உள்நாட்டு படை சார்பில் சிறப்பு விருதளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கிழக்கு ஜூராங் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில், 3 வயது குழந்தை ஒன்று பால்கனியில் நின்று கொண்டு ஐபேடில் விளையாடியுள்ளது. எதிர்பாராதவிதமாக, பால்கனி தடுப்புக் கம்பியின் வெளிப்புறமாக ஐபேடு தவறி விழுந்துவிட்டது.
உடனே ஐபேடை எடுக்க குழந்தை, கம்பிக்குள் நுழைந்துள்ளது. துரதிர்ஷ்ட வசமாக, குழந்தை கம்பிக்கும் சுவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. சுவற்றுக்கும் கம்பித் தடுப்புக்கும் இடையில் உள்ள பகுதிக்குள் விழுந்த குழந்தையின் உடல் முழுவதும் மாடியில் இருந்து கீழே தொங்கியது. தலைப்பகுதி மட்டும் இடைவெளிக்குள் சிக்கிக்கொண்டது.
வலி தாக்காமல், குழந்தை அலறியது. அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து தீயனைப்பு துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. அதேவேளை, அப்பகுதியில், தமிழக தொழிலாளர்களான சண்முக நாதன் (35), முத்துக்குமார் (24) ஆகியோர் சாலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாடியில் குழந்தை சிக்கிக் கொண்டதைக் கேள்விப்பட்டு உடனே, மாடியின் மீது ஏறி, குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர், சண்முக நாதனும், முத்துக்குமாரும். தகவலளித்த 5 நிமிடத்தில் தீயனைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அதற்குள்ளாகவே சண்முக நாதனும், முத்துக் குமாரும் குழந்தையைக் காப்பாற்றிவிட்டனர்.
விரைந்து செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காக, நாதனையும், முத்துக்குமாரையும், அப்பகுதி மக்கள் பாராட்டினர். மேலும், இருவருக்கும் கடந்த வியாழக்கிழமை, சிங்கப்பூர் உள்நாட்டு பாதுகாப்பு படையினர், ”பப்ளிக் ஸ்பிரிடெட்னஸ் அவார்ட்” என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளனர். சண்முக நாதன் சிங்கப்பூரில் 4 வருடங்களும், முத்துக் குமார் 3 வருடங்களும் தங்கி வேலை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment