கடந்த ஏப்ரல் 7ம் தேதி தமிழகத்தை உலுக்கிய சம்பவம், 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம். இச்சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்று ஒரு பக்கம் கூறப்பட்டது.
இதனை நேரில் பார்த்த சாட்சியாக 2 பேர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டது.
அதே வேளை, இச்சம்பவம் தொடர்பில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து என்கவுண்டரில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அனைவரது பெயரும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கு மீதான விசாரணை, நேற்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் போது, 20 பேர் கொல்லப்பட்டு 17 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னமும் ஏன் இது குறித்து யாரும் கைது செய்யப்படவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பில் ஆந்திர அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஆந்திர அரசு வழக்கறிஞர், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளதாகவும் இதில் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறியும், இதுவரை ஏன் சமர்ப்பிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வருகின்ற 28 ஆம் தேதிக்குள் விசாரணை தொடர்பான ஆவணங்களை கண்டிப்பாக தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.







No comments:
Post a Comment