Wednesday 25 February 2015

'வசந்தமாளிகை' ஒளிப்பதிவாளர் ஏ வின்சென்ட் மரணம்..!


பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஏ வின்சென்ட் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.வின்சென்ட், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவர் தமிழில் யார் பையன், உத்தம புத்திரன், கல்யாணப் பரிசு, விடிவெள்ளி, தேன் நிலவு, போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட். ஸ்ரீதர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார்.
எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண் போன்ற படங்களுக்கும், சிவாஜி கணேசன் நடித்த கவுரவம், வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏராளமான தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள வின்சென்ட், 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
1963-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இடம்பெற்ற ‘சொன்னது நீதானா’ பாடலை மருத்துவமனையின் சிறிய அறைக்குள்ளேயே அற்புதமாக ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட். அந்த சிறிய அறைக்குள் அத்தனை விதமான ஆங்கிளில் படம்பிடித்து சாதனை படைத்தவர்.
1997-ம் ஆண்டு அன்னமய்யா தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததோடு, ஓய்வை அறிவித்தார். 2003-ம் ஆண்டு இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் இவருக்கு கவுரவ உறுப்பினர் பதவி அளித்தது.
பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஜெயனன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட் இவரது மகன்களாகும். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் இன்று மரணமடைந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வின்சென்டின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment