Thursday 26 February 2015

காக்கி சட்டை படம் எப்படி..? முன்னோட்டம்..!


சிவ கார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு நடிப்பில் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ’காக்கி சட்டை’. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கி வெளியிட்டுள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளிவந்த எதிர் நீச்சல் படம் மாபெரும் வெற்றியை பெற்றதால் காக்கி சட்டை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.
முதன் முறையாக காமெடி டிராக்கை விட்டு ஆக்‌ஷனுக்கு களம் இறங்கியிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் கைக்கொடுத்ததா என்றால், ’ஆம்’ என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு இது செட்டாகவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.
இந்தப் படத்தை எடுத்துக்கொண்டிருக்கும் போதே இயக்குநர் துரை. செந்தில்குமார் காக்கி சட்டை படம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று கூறினார். அவர் சொன்னதை போலவே இந்தப்படம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
முதன்முறையாக சிவகார்த்திகேயன் போலீஸ் கெட்டப்பில் தோன்றியுள்ளார். ஆக்சன் இருந்தாலும் வழக்கமான தனது காமெடியிலும் அசத்தியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனின் பெயர் மதிமாறன்.
ஆரம்பத்தில் அமைதியான போலீசாக வந்து காமெடி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தால் தான் யார் என்பதை நிருபிக்கும் விதமாக சீரியசாக களமிறங்குகிறார். உடலுறுப்பு வர்த்தகத்தில் நடக்கும் குற்றத்தை கண்டறிந்து அதை எப்படி முழுவதுமாக அழித்தார் என்பது தான் மீதி கதை.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு போலீஸ் வேடம் ஓரளவு நன்றாக பொருந்தியுள்ளது. பிரபு படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வந்து மனதில் பதிகிறார். நாயகி ஸ்ரீதிவ்யா படம் முழுவதும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறாராம். படத்தில் அஜித், விஜய், ரஜினி என உச்ச நட்சத்திர ரசிகர்களை கவரும் விதமாக அங்கங்கே வசனங்கள் வைத்து கைதட்டல் வாங்குகிறார் இயக்குநர்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே செம ஹிட், பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி சீரியசாகவும் செல்கிறதாம் படம். இது படத்தை பார்த்த வெளிநாட்டு ரசிகர்களின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment