Wednesday 25 February 2015

ஒரே நாளில் 34 பேர்: பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியா முழுவதும் 875 பேர் பலி!!


ஸ்வைன் ஃப்லூ என்ற பன்றிக்காய்ச்சல் இந்தியா முழுவதும், மிக வேகமாகப் பரவி வருகிறது. H1N1 வைரஸால் ஏற்படும் இந்நோயால் நாடு முழுவதும் சுமார் 875 பேர் உயிரிழந்துள்ளதாக, இந்திய சுகாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு சில வாரங்களாகவே பன்றிக் காய்ச்சல் நோய் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடுமுழுவதும், 15 ஆயிரத்து 413 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், இந்தியத் தலைநகர் டெல்லியில் மட்டும் 119 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் அதிகபட்சமாக 219 பேர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஜனவரி முதல் சுமார் 230 பேர் இறந்துள்ளனர். இதில் 50 பேர் சிகிச்சை அளிக்கச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே குஜராத்தில் தான் அதிகபட்சமாக சுமார் 3,500 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. நோயின் தீவிரத்தால், குஜராத் தலைநகர் அகமதாபாதில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் இதுவரை 8 பேர் நோய்த் தொற்றால் இறந்துள்ளனர். மேலும் 255 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் கூறுகையில், இதுவரை 155 பேருக்கு வெற்றிகரமாக பன்றிக் காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், 20,000 தடுப்பூசிகள், நான்கு லட்சம் டமிஃப்லூ மாத்திரைகள், 7,000 பாதுகாப்பு உபகரணங்களும் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கையாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, கடந்த 2009ம் ஆண்டு இந்தியர்களைத் தாக்கிய அதேவகை பன்றிக் காய்ச்சல் வைரஸ்தான் தற்போதைய பாதிப்பிற்கும் காரணம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment