Thursday 26 February 2015

34-வது திருமண நாள்..! ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி..!


ரஜினி - லதா தம்பதியினருக்கு இன்று 34 வது திருமண நாளாகும். உலகமே போற்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருப்பவர் ரஜினி. இவர் 1981ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி லாதாவை திருப்பதியில் திருமணம் செய்துக்கொண்டார். இது காதல் திருமணமாகும்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் பயிற்சி நிருபராக இருந்த லதா, ரஜினியை பேட்டி காண சென்ற போது லதாவை பார்த்ததும் ரஜினிக்கு காதல் மலர்ந்தது. தனது காதலை அந்த நிமிடமே லதாவிடம் சொல்லிவிட்டார் ரஜினி. ஆனால், யோசித்து தெரிவிப்பதாக கூறிய லதா, பின்னர் ரஜினியின் காதலை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் லதாவுடனான திருமணம் பற்றி ரஜினிகாந்த் பத்திரிகை நிருபர்களிடம் அறிவித்தார் ஒரு நிபந்தனையோடு. பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்திற்கு வரக்கூடாது என்பதுதான் அது. திருமணத்துக்கு முதல்நாள் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது இயக்குநரிடம் ‘நாளை ஒரே ஒரு நாள் மட்டும் எனக்கு விடுமுறை வேண்டும். என்றாராம். காரணம் கேட்காமல் முத்துராமன் அனுமதி கொடுத்துள்ளார். மறுநாள் லதாவை மணந்துகொண்டு வந்து அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார் ரஜினி. தற்போது இவர்கள் திருமணம் செய்து 34 வருடங்களாகிறது. இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர் என்பதை அனைவரும் அறிவர். திரையுலகம் என்றாலே ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, எப்போது வேண்டுமானாலும் முறிந்து போகும் உறவுகள் என்பதுதான் பலர் மனதிலும் உள்ள பிம்பம்.
இந்த பிம்பத்தை தகர்த்தவர்கள் தான் ரஜினி-லதா தம்பதியினர். "மனைவி வந்த நேரம்தான் என் வாழ்க்கை சீரான பாதைக்குத் திரும்பியது... என் வாழ்க்கையின் எந்த முடிவையும் மனைவியைக் கேட்காமல் எடுத்ததில்லை. கணவன் - மனைவி என்றால் சின்னச் சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும்... அதையெல்லாம் ஜாலியாகக் கடந்து வர வேண்டும்," என வெளிப்படையாகச் சொல்பவர் ரஜினி. தன் கணவர் ரஜினிக்காக எதையும் செய்யத் தயங்காதவர் லதா.
அவர் உடல் நலம் குன்றியிருந்தபோது நிலைகுலைந்து விடாமல், ஒரு இரும்புப் பெண்மணியாக நின்று அவர் நலம் பெற துணை நின்றார். கணவர் நலம் பெற்று வந்தததும், கடவுளுக்கு தன் முடியை காணிக்கையாக்கினார். ரஜினி என்ற மாபெரும் ஆளுமை சோதனைகளில் சிக்கும்போதும், அவருக்கு கவசமாகத் திகழ்ந்தவர், திகழ்பவர் லதா.ரஜினி- லதா தம்பதியினரை ஒவ்வொரு தம்பதியும் உதாரணமாக வைத்துக்கொள்ளலாம்.
மேலும் இன்று திருமண நாள் என்பதால் தன் வீட்டிற்கு முன்பு குவிந்த ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. காலையிலேயே ரஜினி - லதா தம்பதியரைப் பார்க்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்களை ரஜினியின் உதவியாளர் சத்தியநாராயணா ஒழுங்குபடுத்தினார். பின்னர் ரஜினி வெளியில் வந்து சிறு மேடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கும்பிட்டார். ரசிகர்கள் அவரைப் பார்த்து தலைவா.. வாழ்த்துகள் என்று முழங்கினர். அவரும் சிரித்தபடி நன்றி கூறி வாழ்த்துகளை ஏற்றார்.
ரஜினி திருமண நாளையொட்டி ‘தலைவர் பவுண்டேஷன்’ சார்பில் காட்டாங் கொளத்தூரில் உள்ள சிவானந்த குருகுல ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் 320 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஆதரவற்ற 60 முதியோர்களுக்கும் உணவு வழங்கினர். இதில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சைதை ஜி.ரவி, வாலாஜா கலிபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment