இந்தியாவிற்கு நிர்பயா சம்பவம் போல், இலங்கையில், 18 வயது பள்ளி மாணவி பலரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன், இலங்கையின் புங்குடு தீவு பகுதியைச் சேர்ந்த வித்யா சிவயோகநாதன் என்ற பள்ளிச் சிறுமி, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் வட மாகாண மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி, பொதுமக்கள் பலர் போராட்டத்தில் இறங்கினர்.
கடும் கோபமடைந்த மக்கள், சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் புங்குடு தீவைச் சேர்ந்த மூவரது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. வட மாகாணத்தின் முக்கிய பிராந்தியமான யாழ்பாணத்தில் பள்ளிகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
அப்பகுதிகளில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலையச் செய்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக சுமார் 100 போராட்டக் காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
வித்யா சம்பவம் தொடர்பில், நீதி கேட்டு நீதிமன்றத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இதை அடுத்து வித்யா படுகொலையில் தொடர்புடைய 9 பேரை போலீஸார் கைது செய்தனர். என்றாலும், குற்றவாளிகள் சிலர் காப்பாற்றப்படுவதாகக் கூறி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், மண்ணார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிக் குழந்தைகள் போராட்டத்தி ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோரச் சம்பவத்தை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை கொடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஆங்காங்கே கடை அடைப்புகளும் நடந்து வருகின்றன. மட்டக்களப்பில் இன்று முழு அடைப்பு நடந்து வருகிறது.
இலங்கை போர் முடிவதற்க்கு முன் 2000மவது ஆண்டிற்கு பின் நடக்கும் மிகப் பெரிய அடைப்பாக இது கருதப்படுகிறது. வடக்கு மாகாணங்களைத் தொடர்ந்து கிழக்கு மாகாணங்களிலும், வித்யா மரணம் தொடர்பாக நியாயம் கிடைக்க வேண்டி போராட்டம் வலுத்து வருகிறது.







No comments:
Post a Comment