Tuesday 26 May 2015

”இது ஒரு ஆரம்பம் தான்” மோடியின் ஓராண்டு நிறைவு மடல்!!


பா.ஜ.க., மத்தியில் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு திறந்த மடல் வெளியிட்டுள்ளார்.
இந்த மடலில், பா.ஜ.க., அரசு ஏழைகளின் நலனுக்காகவே செயல்படுவதாக தெரிவித்துள்ள மோடி, நம் கணவு இந்தியாவை அனைவரும் கூட்டக உருவாக்குவோம், என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் மடல் பின்வருமாறு:
எனது அன்பு சக குடிமக்களே,
சேவை என்பது இந்திய நாட்டின் முதன்மை பணியாகும். கடந்த ஒரு ஆண்டுக்கு முன், என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்ததை மனதில் கொண்டு, பொறுப்பை உணர்ந்து பிரதம சேவையாளராக செயல்பட்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் என்னுடைய உடலையும், ஆற்றலையும் நாட்டுக்காக அர்ப்பணித்து உண்மையுடனும், நேர்மையுடனும் நடந்து வருகிறேன்.
ஊழலும், உறுதியற்ற தன்மையும் அரசை முடக்குவாதத்தில் தள்ளியதால், நாட்டு மக்களிடம் நம்பிக்கை தேய்ந்துபோன நிலையில், நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றோம். பணவீக்கமும் உயர்ந்துகொண்டு, பொருளாதாரமும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தபோது உறுதியான உடனடி நடவடிக்கை தேவைப்பட்டது. இந்த சவாலான பணியை நாம் முறையாக எதிர்கொண்டோம்.


கட்டுக்கடங்காமல் இருந்த விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அரசின் நிலையான கொள்கைகளால் பொருளாதாரமும் சீரானது. இயற்கை வளங்கள் தாரை வார்க்கப்படாமல், வெளிப்படையான ஏல முறையில் ஒதுக்கப்பட்டது. கருப்பு பண விவகாரத்தில் சிறப்பு குழு அமைக்கப்பட்டதுடன், கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.
ஊழல் இல்லாத அரசை நடத்தி திறம்பட செயலாற்றி வருகிறோம். டீம் இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில், தேசிய வளர்ச்சியில் மாநிலங்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளோம். அரசின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளோம். ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் ஏழை மக்களின் அரசாக தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது.
பள்ளிகளில் கழிவறைகள் கட்டுவது, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுவது உள்ளிட்ட பெருமளவிலான திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும், சாதாரண மக்களுக்கு சமூக பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கும் மானியங்கள் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில் வங்கிகளில் செலுத்தப்படுகிறது.


சிறு தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கங்கை நதியை சுத்தப்படுத்து பணி தொடங்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் ரயில் பாதை வழியாக நாடு முழுவதையும் இணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம் கிடைக்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருவது, ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பது போன்ற சிறப்பான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நண்பர்களே இவையெல்லாம் ஆரம்பம் மட்டும் தான். நம்முடைய நோக்கம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் சிறப்பான சேவையை அளிப்பது தான்.
ஆகவே அனைவரும் இணைந்து, நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் மற்றும் உங்களின் கனவு இந்தியாவை கட்டமைப்போம். இந்த கடிதம் மூலமாக உங்களின் ஆசிர்வாதம் மற்றும் ஆதரவையும் அளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment