பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அருள்நிதி. இந்தப் படத்தை தொடர்ந்து மௌனகுரு, உதயன், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதில் மெளனகுரு படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தற்போது இவருடைய நடிப்பில் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘டிமான்டி காலனி’ ஆகிய படங்கள் தயாராகியுள்ளது.
இதில் ‘டிமான்டி காலனி’படம் இன்று வெளியாகியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காலனியில் பல வருடங்களாக பேய் இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இதனை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறாராம் அறிமுக இயக்குநர் அஜய் ஞானதாஸ். நடிகர் அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள் டிமாண்டி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வரும் போது அங்கு நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
பேய்களின் அட்டகாசத்தால் பாதிக்கப் படும் அருள்நிதி ஒரு கட்டத்தில் பேயாக மாறி எல்லோரையும் பயமுறுத்த அதற்கு பின் என்ன என்பது கிளைமாக்ஸ். சிங்கம் புலி,மதுமிதா, சூது கவ்வும் ரமேஷ் திலக், சனத் மற்றும் அபிஷேக் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஹீரோயின் கிடையாது.
இப்போது வரும் அனைத்து பேய் படங்களும் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் வேளையில் இந்தப் படம் சீரியஸ் பேய் படமாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மாதவன் நடித்த யாவரும் நலம் ஆதி நடித்த ஈரம் படங்கள் போல இந்தப் படம் செம திகில் படமாக இருக்குமாம். இசையமைப்பாளர் கெபா ஜெரிமியா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் டம்மி பீசு பாடலை இசையமைப்பாளர் டி.இமானும், வாடா வா மச்சி பாடலை கொலைவெறி புகழ் அனிருத்தும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







No comments:
Post a Comment