’சதுரகிரி’ திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள புராதன சிவன் கோயில். தமிழ் வருடம் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் கூடி விரதமிருந்து சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வர். நாலாபுறமும் மலை சூழ்ந்துள்ளதால் இதற்கு "சதுரகிரி" என்ற பெயர் உண்டானதாகவும், சதுர் (நான்கு) வேதங்கள் இங்கு சந்தித்து கிரி (மலை) உருவாகியதால் சதுரகிரி எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதால் இப்பெயர் என்றும் ஒரு கூற்று. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மஹாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோயிலின் சிறப்பு.
இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு உள்ளது. மிகுந்த திகைப்பூட்டும் இந்த மலைகளில், இன்னமும்கூட சித்தர்கள் சிவபெருமானை வணங்கிவருவதாக நம்பப்படுகிறது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த மலைக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள சுந்தர மாகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு.
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.
மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது.
ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி ’மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.
இங்கு பயணம் செய்யும் அனுபவத்தை பற்ற அடுத்த வாரம் ஆன்மீகப்பார்வை பகுதியில் காணலாம்.







No comments:
Post a Comment