அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கடந்த மே 11ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதற்கான பணிகள் தட புடலாக நடந்து வருகின்றன.
இன்று காலை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது, இதில், அ.தி.மு.க.,வின் சட்டசபைத் தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அடுத்து, தற்போதைய முத்லவர் ஓ.பன்னீர் செல்வம் தம் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஆளுநர் ரோசையா, புதிய ஆட்சி அமைக்க ஜெயலலிதாவை அழைத்துள்ளார். இன்று மதியம் ஜெயலலிதா ஆளுநரைச் சந்திக்க உள்ளார்.
நாளை பிற்பகல் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையில், ஜெயலலிதா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்ணி, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, கர்நாடக உயர்நீதிமன்ற கோடைக்கால பெஞ்ச் முன்னிலையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் வேணுகோபால் கவுடா மற்றும் வீரப்பா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக போதிய விளக்கங்கள் இல்லாததால், விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர். அதோடு, வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.







No comments:
Post a Comment