Wednesday, 11 February 2015

ஆணுறைக்கு தட்டுப்பாடாம்.. வெனிசூலா மக்கள் அவதி…!


வெனிசூலாவில் ஆணுறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிக அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கும் நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வெனிசூலாவில் 36 ஆணுறைகள் கொண்ட பாக்கெட் ஒன்று சுமார் 97,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசூலாவில் கடந்த காலங்களில் பால், சோளம், கோழி இறைச்சி போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. அத்துடன் ஆணுறைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதிக பொருளாதார வீக்க நிலைக்கு மத்தியில் கடந்த பல வாரங்களாக ஆணுறைகள் இறக்குமதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பல சுப்பர்மார்கெட் மருந்தகங்களிலும் ஆணுறைகள் விற்றுத் தீர்ந்துள்ளன. சில மருந்தகங்களில் ஒரு தம்பதிக்கு ஒரு ஆணுறை என்ற விகிதத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
வெனிசூலாவில் 0.6 சதவீதமானோருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ள நிலையில் ஆணுறை தட்டுப்பாடு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் வெனிசூலாவின் வணிக இணையத்தளமொன்று 36 ஆணுறைகள் கொண்ட பாக்கெட் ஒன்றை 4,760 பொலிவார்ஸ் (755 அமெரிக்க டாலர்).
அதாவது, சுமார் 97,000 ரூபாவுக்கு விற்பனை செய்கிறதாம். இது ஏறத்தாழ அந்நாட்டின் மிகக் குறைந்த மாதாந்த ஊதியத்துக்கு சமனாகும். (அமெரிக்காவில் இத்தகைய ஆணுறைகளை சுமார் 20 டாலர்களுக்கு வாங்கலாம்.) வெனிசூலாவில் உள்நாட்டு விநியோகத்துக்காக ஆணுறை தொழிற்சாலையொன்றை அரசாங்கம் நிர்மாணிக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
அத்தகைய தொழிற்சாலையொன்றும் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், அங்கு தயாரிக்கப்படும் ஆணுறைகள் மக்கள் விரும்பும் அளவுக்கு தரமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை உள்நாட்டு விநியோகத்துக்கு போதுமான அளவு உற்பத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆணுறைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களுக்கும் வெனிசூலாவில் தட்டுப்பாடு நிலவுகிறது. வேண்டுமென்றே நீண்ட வாடிக்கையாளர் வரிசைகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சூப்பர்மார்கெட் உரிமையாளர்கள் சிலரும் அந்நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர்.
உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், டியா டியா எனும் சூப்பர்மார்கெட் நிறுவனத்தை கைப்பற்றும்படி அந்நாட்டு ஜனாதிபதி கடந்த வாரம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment