Wednesday, 11 February 2015

என்ன ஒரு அதிசயம்..!


பிரிட்டனில் இதயநோய்க்குள்ளான பின் சைக்கிளோட்ட வீரர் ஒருவரின் இதயம் பொருத்தப்பட்ட நபர் ஒருவர் அவ்வறுவைசிகிச்சையின் பின்னர் தானும் சைக்கிளோட்டத்தில் ஆர்வம் கொண்டவராக மாறியிருப்பதை உணர்ந்து வியப்படைந்துள்ளார்.
38 வயதான கெவின் மாஷ்போர்ட் எனும் வர்த்தகரின் இதயத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவர் சில வாரங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அவருக்கு அண்மையில் விபத்தில் இறந்த ஒருவரின் இதயம் பொருத்தப்பட்டது.
13 மணித்தியாலங்கள் நடந்த இச்சிகிச்சையின் பின்னர் மேற்படி இதயமானது தீவிர சைக்கிளோட்ட அபிமானியான ஜோன் என்பவரினுடையது எனவும் அவர் வாகன விபத்தொன்றில் இறந்தார் எனவும் கெவின் மாஷ்போர்ட்டிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த அறுவைச் சிகிச்சை முடிந்து 7 நாட்கள் கடந்த நிலையில், தனது உடற்பயிற்சிக்காக சைக்கிளொன்றை கொண்டுவருமாறு கெவின் மாஷ்போர்ட் தனது மருத்துவ உதவியாளர்களிடம் கூறினார்.
தான் முன்னர் ஒருபோதும் சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டிருக்காத போதிலும் இச்சிகிச்சையின் பின்னர் தனக்கு சைக்கிளோட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னரும் அவர் தினமும் சைக்கிளோட்டத்தில் ஈடுபடுகிறராம்.
இதன்போது தான் அணியும் தலைக்கவசத்தில் ஜோனின் பெயரை மாஷ்போர்ட் பொறித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜோனின் நினைவாக அறக்கட்டளையொன்றுக்கு நிதி திரட்டுவதற்காக 342 மைல் தூரம் சைக்கிளோட்டத்தில் ஈடுபடுவதற்கும் கெவின் மாஷ்போர்ட் தயாராகிவருகிறார்.

No comments:

Post a Comment