சுவிஸ்ஸிற்கு அகதிகளாக வந்து அனுமதி மறுக்கப்பட்டவர்களை நாட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்காக, சென்ற வருடம் மட்டும் கிட்டத் தட்ட 8.5 மில்லியன் பிராங்குகள் சுவிஸ் அரசு செலவிட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
சுவிஸ்ஸில் இருந்து வெளியேற மறுத்த அகதிகளை வெளியேற்றுவதற்காக மட்டும் 41 விமானங்களை பயன்படுத்தியுள்ளதாம் சுவிஸ் அரசு. 2013ம் ஆண்டு சுவிஸ்ஸில் இருந்து 8,590 அகதிகள் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் 2,444 பேர் எந்த பிரச்சனையும் இன்றி தாமாக வெளியேறினர். ஆனால், மீதமிருந்த 6,146 அகதிகள் போலீசாரின் உந்துதலுடன் கட்டாயப்படுத்தி தனி விமானங்கள் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதிலும், அனுமதி மறுக்கப்பட்டு சுவிஸ்ஸில் மறைந்து வாழ்ந்த சிலரை, காவல் துறையினர் கண்டுபிடித்து, தங்கள் கஸ்டடியில் வைத்திருந்து திருப்பி அனுப்பியுள்ளனர். சிலர் கைவிலங்குடன், சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பப் படுவதும் உண்டு.
2010ம் ஆண்டு நைஜீரியாவைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, இதே போல், விசேஷ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சுவிஸ்ஸின் சூரிச் விமான நிலையத்தில் உயிரிழந்தார்.
இவ்வாறு அகதிகளை இடப் பெயற்றம் செய்வதற்காகவே சுவிஸ் அரசு இடம்பெயர்தல் அமைப்பை வைத்துள்ளது. இந்த அமைப்பின் செயலாளர் ஒருவர் கூறும் போது, கடந்த 2014ம் ஆண்டில் சுவிஸில் இருந்து வெளியேறிய 252 புகலிடம் கோரியவர்களுக்காக மட்டும் சுமார் 2.8 மில்லியன் பிராங்குகள் செலவிடப்பட்டுள்ளது.
மேலும் மொத்தமாக, செலவிடப்பட்ட 8.5 மில்லியன் பிராங்குகளில் பொலிசாருக்கு செலவிடப்பட்ட தொகை சேர்க்கப்படவில்லை என்று கூறினார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 57 கோடி.

No comments:
Post a Comment